குருவிரல் அதிஷ்டம்

குருவிரல் அதிஷ்டம் 

சாப்பிடும்பொழுது ஆள்காட்டி விரலை சிலர் சற்று விலக்கி சாப்பிடுவார்கள். நீங்களும் அதைப் பார்த்திருக்கலாம். சிலருக்கு தன்னை அறியாமல் இந்த நிகழ்வு நடக்கும். கிராமங்களில் பெரியவர்கள் இந்த நிகழ்வைப் பார்த்தால் அவ்வாறு விரலை நீக்கி சாப்பிடாதீர்கள் என்று கூறுவார்கள். குடும்பத்தில் தனித்து பிரியும் நிலை ஏற்படும். பங்காளி பிரிவு உண்டாகும் என்று பலன் கூறுவார்கள். இது உண்மையே.

ஆள்காட்டி விரலை குரு விரல் என்றும் அழைப்பார்கள்.  சுட்டு விரல் என்றும் அழைப்பார்கள். மற்றும் அதிகார விரல், அறிவு விரல் என்றும் அழைப்பார்கள். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பஞ்ச பூதத்திற்கு ஆளுகை என்று நம் சித்தர்கள் சொல்லி சென்றுள்ளார்கள். அதன்படி இந்த ஆள்காட்டி மிக முக்கியத்துவம் வாய்ந்த காற்று பூதத்தோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்கள். காற்றில்லையேல் இந்த பூமியில் உயிர்கள் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த அதிஷ்ட விரல்தான் குருவிரலாகும்.

இந்த குருவிரல் மகத்துவம் வாயந்ததாகும். குருவிரலால் தொட்டு செய்யும் காரியங்கள் நன்கு விருத்தியாகும். சுப செயல்களை குருவிரலை தொட்டு துவங்கினால் நன்கு சுபகாரியங்கள் வளரும். பாவகாரியங்களை இந்த விரல் தொட்டு செய்தல் கூடாது. பிறகு பாவமும் வளர்ந்துகொண்டே இருக்கும். குபேர விரல் என்றும் அனுபவத்தில் இந்த விரலை குறிப்பிடுவார்கள். ஐந்து விரல்களும் ஒன்றிணைந்து செய்யும் செயல்கள் வலிமையுள்ள வெற்றியை தரும் என்பார்கள்.

அதேநேரத்தில் குருவிரலை நீக்கி மற்ற விரல்கள் ஒன்றிணைந்து செய்யும் செயல்கள் விருத்தியாகாது. உணவு சாப்பிடும்போதும் இந்த விரலை நீக்கி சாப்பிட்டால் அந்த உணவு சரிவர செரிமானம் ஆகாது. இந்த விரல் பட்டு சாப்பிடும் உணவு விஷமானாலும் விரைந்து அதன் சக்தியை இழந்து நன்மையாக மாறிவிடும் என்பார்கள். அந்த அளவு சிறப்புமிக்க இந்த விரலை நீக்கி உணவு சாப்பிடுபவர்கள் தரித்திரனாக வாழக்கூடிய சூழலும், தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகும் நிலையும், ஞாபகசக்தி குறைந்துபோகும் நிலையும், எவ்வளவு செல்வம் வந்தாலும் வீண் விரையம் ஆகும் நிலையுமே அமைவதை எம் ஆய்வில் கண்டிருக்கிறேன். பெரியவர்கள் நமக்கு சொல்லிச் சென்ற எதுவுமே அனுபவமானவைகளே. தங்களிடமும் இந்த குபேர விரலை நீக்கி உணவு சாப்பிடும் பழக்கம் இருந்தால் குடும்ப நலன் கருதி மாற்றிக்கொள்ளுங்கள்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *