குலதெய்வத்திற்கு முதல் தெய்வம்

குலதெய்வத்திற்கு முதல் தெய்வம் யார் தெரியுமா?

இந்துக்கள் அனைவருக்கும் பொதுவான குலதெய்வம் யார் தெரியுமா?
இந்துக்கள் தன் தொழிலை சார்ந்தும், தன் குல முன்னோர் காட்டிய வழியைச் சார்ந்தும், தன் சூழ்நிலை சார்ந்தும் குலதெய்வத்தை முறைப்படுத்தி பரம்பரை பரம்பரையாக வழிபட்டு நல்லருள் பெறுகின்றனர்.

இதில் பலர் சூழ்நிலை காரணமாகவும், தொழில் வசதி கபரணமாகவும் இடப்பெயர்ச்சியாகி குலவழக்கப்படி செய்துவந்திருந்த பூஜை முறைகளை மாற்றி பின்னாலில் தன் வசதிப்படி கடைபிடித்து பின்பு போக போக குலதெய்வத்தையே மறந்து வருங்கால சந்ததிக்கு தன் குலதெய்வம் யார்? பெயர் என்ன? எங்குள்ளது என்பதைக்கூட சொல்லிச் செல்லாமல் மறைந்துவிடுகின்றனர்.

சந்ததிகள் குலதெய்வ அருள் இல்லாததால் உறவுகளை இழந்து, பொருளிழந்து, நிம்மதி இழந்து தவிக்கின்றனர். பலர் குடும்பத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் மனதளவில் பிரிந்தும் வாடுகின்றனர். இவையாவும் குலதெய்வ குறைபாடே என்று பின்னால் அறிகிறார்கள்.

குலதெய்வ அருள் இல்லாதவருக்கு நாகதோஷம் செவ்வாய் மற்றும் குருசுக்ர தோஷம் வலிமையாக தன் தீய பணியைச் செய்யும், குலதெய்வ அருள் உள்ளோருக்கு ஜாதகத்தில் தோஷம் உள்ள இடத்தில் கிரகங்கள் கூடுமானவரை நன்மையைச் செய்யும். நன்மைகள் குறைவாக செய்தாலும் தீமைகளைச் செய்யாது. இந்த சூழ்ச்சுமம் அறியாதவர் தான் இவ்வாறாக பேசுவார்கள். எப்படி என்றால் நான் பிறந்த அதே வேளையில்தான் என் நண்பனும் பிறந்துள்ளான். ஆனால் அவன் மட்டும் சொத்து சொந்தம் சுகம் என எக்குறையும் இன்றி வாழ்கிறான். அவனுக்கும் ஜோதிடர் தோஷம் என்றுதான் கூறினார். ஆனால் அவன் நிலையே வேறாக இருக்கிறது. அதே தோஷம் எனக்கும் இருக்கிறது என ஜோதிடர் பரிகாரமெல்லாம் கூறினார். எல்லாவற்றையும் செய்தும் என் நிம்மதி கிடைக்கவேயில்லை என புலம்புவதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.
உண்மையான விஷயம் என்னவெனில் ஒருவர் குலதெய்வத்தை தொடர்ந்து ஆராதிப்பவர் அவர் தோஷம் இருந்தும் நன்றாக இருக்கிறார். கஷ்டப்படுபவருக்கு குலதெய்வ அருள் இல்லாததால் தோஷங்கள் பரிகாரம் செய்தும் விலகவில்லை. இதை ஜோதிடராலும் அவ்வளவு எளிதில் கண்டுணர முடியாது. ஜாதக கட்டத்தை வைத்தும் துல்லியாக சொல்ல முடியாது. அனுபவத்தில்தான் சொல்ல முடியும்.

ஆக குலதெய்வம் அருள் இல்லை என்றால் என்ன மாதிரியான பிரச்சனையெல்லாம் வரும் என வருணிக்க இயலாது. அவ்வளவு துன்பமும் தடையும் வரும். இதை உணர்ந்தவர்கள் இன்றைக்கு ஜோதிடர்களை நாடி எது என் குலதெய்வம் என்று கேட்கிறார்கள், அருள்வாக்கு சொல்வோரிடமும் கேட்கிறார்கள் சரியான பதில் கிடைக்கவில்லை என வருந்துபவர்கள் பலர் உண்டு

.
உறவுகள் இருந்தால் அவர்களை கேட்கலாம். அவர்களும் இல்லை. உறவே யார் என்றும், எங்கிருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என ஏங்கி வழி தெரியாமல் தவிப்பவர்களும் பலர் இருப்பதை அறிந்திருக்கிறேன். இவர்களைப் போன்ற பாதிக்கப்பட்டு குலதெய்வ அருளைப் பெற ஏங்குபவர்கள் குறைதீரவே இந்த கட்டுரையை எழுதுகிறேன். அறிவீராக.

இந்துக்களான அனைவருக்கும் ஆளாளிற்கு வெவ்வேறு குலதெய்வம் இருந்தாலும் அந்த குலதெய்வத்திற்கு முதல் தெய்வம் ஸ்ரீவிநாயக பெருமானே ஆவார். குலதெய்வம் தெரியாதவர் ஸ்ரீகணபதியை தொடர்ந்து தன் குலதெய்வமாக பாவித்து வணங்கினாலே போதும். தங்கள் குலதெய்வம் யார் என்று தெரியாவிட்டாலும் உங்கள் முன்னோர் பரம்பரை பரம்பரையாக வழிபட்ட குலதெய்வ அருள் உங்களுக்கு தேடிவந்து கிட்டும். செய்யும் பூஜையை மனம் ஒன்றி அன்பாக செய்ய வேண்டும். ஸ்ரீகணபதிக்கு இப்படித்தான் படையல் இடவேண்டும் என்ற கட்டாயம் இல்லை விரும்பியதை அன்போடு சமர்பித்தால் போதும்.

ஸ்ரீ கணபதியே அனைவருக்கும் குலதெய்வத்திற்கு முதல் தெய்வமாக இருப்பதால் இவரை வழிபட்டு குறைகளைக்களையலாம். (முக்கிய குறிப்பு : இம்முறையை உண்மையிலேயே எந்த வகையிலும் குலதெய்வம் அறியமுடியவில்லை என்ற நிலையில் இருப்பவருக்கு மட்டுமே பொருந்தும்.)
இந்த கருத்தில் யாருக்காவது ஆட்சேபனை இருந்தால் சிறு விளக்கத்தை அளிக்க கடமைப்பட்டிருக்கிறேன் அறிவீராக. இந்துக்கள் எந்த ஒரு பூஜை சடங்கு சம்பிரதாயம் என எதை செய்தாலும் ஸ்ரீ கணபதியை வழிபடாமல் செய்யமாட்டார்கள் என்பதை யாவரும் அறிவர். சாணம், சந்தனம், மஞ்சள், மண், மாவு என எதில் வேண்டுமானாலும் பிள்ளையார் பிடித்து வைத்து பொட்டிட்டு அலங்கரித்து முதல் ஆரத்தி பூஜை செய்து தன் விருப்ப பூஜை மற்றும் சடங்குகள் யாகங்கள் யாவும் செய்வார்கள். (இந்த தகவலை ஒருபுறம் நினைவில் வையுங்கள்.)

அவரவர் குலவழக்கப்படி குலதெய்வத்தை வணங்க முனைந்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டு பின்னரே தன் குலதெய்வமாக தேர்ந்தெடுத்து முன்னோர் காண்பித்த தெய்வத்திற்கு பூஜை செய்வார்கள். இதையும் யாவரும் அறிவர். இப்பொழுது விஷயத்திற்கு வருவோம். நம் முன்னோர்கள் தொடர்ந்து எந்த தெய்வத்தை வழிபட்டு வந்தனரோ அதுவே நம் குலதெய்வமாகவும், ஊர்தெய்வமாகவும் இருக்கும். (ஊர் தெய்வமும் குலதெய்வத்திற்கு சமமான தெய்வம்தான்.) . தேர்ந்தெடுத்து இதுதான் நம் குலசாமி என்று பூஜிப்பதையே குலதெய்வம் என்று கூறினாலும் நாம் வணங்கிய தெய்வமெல்லாமே நமக்கு கடமைப்பட்ட தெய்வம்தான். அவ்வாறு நம் முன்னோர்கள் வணங்கிய முதல் தெய்வமே ஸ்ரீவிநாயக பெருமானாகத்தான் இன்று வரை இருக்கிறார் .
தொடர்ந்து நம் முன்னோர் வாழ்ந்த மண்ணுக்கு ஒரு சக்தியுண்டு. அந்த ஊரில் நம் முன்னோர்கள் தோற்றுவித்த தெய்வமே நமக்கு சிறப்பான பலனைத் தரும் என்பதைய யாரும் மறுக்க முடியாததுதான். எனினும் பிள்ளையாரை பிடித்து வைத்து உயிர்கொடுத்து பூஜிப்பது போல வேறு எந்த தெய்வத்தையும் அவ்வாறு எடுத்தவுடன் செய்ய முடியாது. அதற்கு சில ஐதீக முறைகளெல்லாம் உண்டு. ஆனால் ஸ்ரீவிநாயக பெருமானுக்கு இந்த ஐதீகமெல்லாம் இல்லை. சாணி, சந்தனம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. ஊர் மண், வெளியூர் மண் என்ற பாகுபாடுகளால் கிடைக்கும் சக்தி வேறுபாடு எதுவும் அவருக்கில்லை எங்கிருந்து மண்ணெடுத்தாலும், கல்லெடுத்து வடித்தாலும் ஒரே சக்தி வெளிப்பாட்டை கொடுப்பவர் ஸ்ரீ விநாயகபெருமான் மட்டுமே. மற்ற எந்த தெய்வத்திற்கும் இந்த உயிர்பெறும் சக்தி இருப்பதாக சாஸ்த்திரங்கள் குறிப்பிடவில்லை. (தவசீலர்களுக்கு மட்டும் மண்ணால் சிவலிங்கம் பிடிக்க அனுமதியுண்டு. ஆனால் பாவி புண்ணியன் என்று எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் உயிர்பெறும் சக்தி ஸ்ரீ விநாயக பெருமானுக்கே உண்டு.
மேலும் நீங்கள் தங்கள் ஊரில் உள்ள பிள்ளையாரை கும்பிட்டாலும் காசியில் உள்ள பிள்ளையாரை கும்பிட்டாலும் இரண்டும் ஒரே பலன் தான் எந்த வித்தியாசமும் கிடையாது. மற்ற தெய்வத்திற்கு இந்த வித்தியாசம் வேறுபடும் என ஆண்டு அனுபவித்த நம் ஞானிகள் கூறியுள்ளார்கள். எனவேதான் எந்த ஒரு சுபநிகழ்விற்கும் கையில் கிடைத்ததைக்கொண்டு பிள்ளையாரை பிடித்து முதலில் வணங்கு என்று கூறுவார்கள்.

மேலும் குலதெய்வ அருள் இல்லா குறையால் உண்டாகும் கிரக தோஷங்கள் யாவற்றிற்கும் ஸ்ரீவிநாயகர் ஆலயமே பரிகாரமாகும். இதை சொன்னவர்கள் நம் சித்த ஞானிகள் இதை காரணம் இல்லாமல் கூறவில்லை. இந்த கிரகதோஷமே குலதெய்வ கோபத்தாலும், குலதெய்வத்தை மறந்ததாலும், உண்டான குற்றமேயாகும். எனவே அனைவரின் குலதெய்வத்திற்கும் முதல்தெய்வமாக விளங்கக்கூடிய ஸ்ரீ விநாயகப்பெருமானை வழிபட்டு மன்னிப்பு கேட்கும்பொழுது குலதெய்வ அருள் உண்டாகிறது. கிரக பீடை விலகுகிறது. இதை நம் ஞானியர் காட்டிய வெற்றிப்பாதையாகும். எனவே குலதெய்வம் தெரியாதவர் ஸ்ரீவிநாயகப்பெருமானை குலதெய்வமாக துதிக்க குலதெய்வ அருள்கிட்டும்.
உங்களுடைய சரியான குலதெய்வத்தை வழிபடும் மார்கத்தை அவரே உங்களுக்கு வழியும் காட்டுவார். யாம் கூட ஸ்ரீசுபமங்கள சாஸ்த்திர நூலில் குலதெய்வம் தெரியாதவர் வெள்ளருக்கன் செடிக்கு பூஜை செய்தால் குலதெய்வ அருள்கிட்டும் என எழுதியிருக்கிறேன். நொச்சில் செடிக்கு பூஜை செய்தாலும் குலதெய்வம் தெரியவரும் என எழுதியிருக்கிறேன். காரணம் இவ்விரண்டு செடிகளும் ஸ்ரீவிநாயகர் அருள்கொண்ட செடிகளாகும். இவைகளில் ஸ்ரீ விநாயகரின் அற்புத சக்தி நிறைந்திருப்பதனால் தான் பலரும் இந்த தகவலை சொல்லியிருக்கிறார்கள்.

நன்கு நுண்ணறிவு ஞானத்துடன் சகலருக்கும் அதாவது ஸ்ரீ ஆதிசங்கரர் வகுத்து கூறிய வேத அங்க தேவதைகளை முதன்மையாக வைத்து வழிபாடு செய்ய காட்டப்பட்ட ஆறு மார்கத்திற்கும் முதற்கடவுளாக இருப்பவர் ஸ்ரீ விநாயக பெருமானே ஆவார். இவரே அறியாதவருக்கும் அறிந்தவருக்கும் முதல் குலதெய்வமாவார்.

முன்னோர்களின் சாபத்தினாலும், குலதெய்வத்தின் அருள் இல்லாததினாலும் உண்டாகும் நாகதோஷம், ஸ்ரீ விநாயகரை வழிபட்டால் மட்டுமே தீரும். நாகதோஷம் தீர அவரவர் குலதெய்வத்தையே கண்டுபிடித்து சென்று வணங்கினாலும், காளஹஸ்தி, திருநாகேஷ்வரம், திருபாம்புரம் என எங்கு சென்று வழிபட்டாலும் ஸ்ரீ விநாயகரை வழிபட்டுச் சென்றால் மட்டுமே தோஷம் மன்னிக்கப்படும். இல்லையேல் வீணாக காலம்தான் கடக்கும், தோஷம் விலகாது. அதனால்தான் எந்த தெய்வத்தை நிர்ணயித்து ஆலயம் அமைத்தாலும் அங்கு ஸ்ரீ விநாயகர் இல்லாமல் இருக்கமாட்டார்.
எனவே மெய்யன்பர்களே குலதெய்வம் தெரியவில்லையே என வருந்தாதீர்கள். கவலையின்றி இருங்கள். தெய்வத்திற்கெல்லாம் முதல் தெய்வமான அந்த ஆதிசிவசக்தி மைந்தரான ஸ்ரீ விநாயக பெருமானை குலதெய்வமாக பாவித்து வணங்குங்கள். குறிப்பாக அரசடியில் உள்ள ஸ்ரீகணபதியை வணங்குங்கள். 11 முறை வலம் வாருங்கள். ஒவ்வொரு சதுர்த்திக்கும் ஸ்ரீ கணபதியை தரிசியுங்கள். வாழ்வில் குறைவற்ற வளம் காணுங்கள். இவரை குலதெய்வத்திற்கு முதல்தெய்வமாக வணங்கிய பின்பு உங்கள் விருப்ப தெய்வத்தையும் வணங்கிக்கொள்ளுங்கள் பலன் பன்மடங்காக கிட்டும்.

குலதெய்வம் அறிந்தவராயினும் முதலில் ஸ்ரீவிநாயக பெருமானை வணங்கி செல்லுங்கள் எதிலும் வெற்றிகாண்பீர். இதை நான் கூறவில்லை இந்த உலகை படைத்த அந்த ஆதிசிவன் கொடுத்த வாக்காகும்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *