பட்சி ஐவகை மூலிகை

மூலிகைகள் ரகசியங்கள்

பட்சி ஐவகை மூலிகை

பஞ்சபூதம் ஐந்து. அவைகளை பஞ்சபட்சிகளாக அடையாள அர்த்த குறியிட்டு (குணம் மற்றும் தன்மையை அறிந்துகொள்ள பட்சிகளை வழக்கத்தில் வைத்தனர். இதையே அர்த்த குறியீடு என்பர்.) வைத்தனர். வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என ஐவகை பட்சிகள் யாவரும் அறிந்ததே. இந்த பட்சிகளை கொண்டு நட்சத்திரங்களுக்கு பிரிவு சக்தி காணப்பட்டு அவைகளை வகைப்படுத்தினர்.

இன்னென்ன நட்சத்திரம் இந்த பட்சி எனும் பஞ்சபூதத்தை சார்ந்ததாக உள்ளது என்பதை கண்டனர். இதில் சிறு குழப்பம் யாதெனில் ராசிப்படியும் பஞ்சபூத குணங்களை கண்டறிந்தனர். இவைகள் முரண்பாடான கருத்துகளை வெளிப்படுத்தியது. இருந்தாலும் பஞ்சபூதம் என்ற கருத்தை விடுத்து பலன் பார்ப்பதற்கு தகுதியானது ராசிகள் என்றும், வெற்றி தோல்வி நேரத்தை சிறப்பாக கணிக்க பயன்படுவது பஞ்சபட்சி என்றும் பிரித்து சமாதானமானது .

அந்த வகையில் பஞ்ச பட்சிகளின் சக்தி ஒரு தனிமனிதனை எந்தளவு ஆளுகிறது என்பதை ஆராயும்போது பிரமிக்கும்படியான தாக்கம் அதில் இருந்தது . அதைவிட பட்சிகளுக்க பிரித்து வைத்துள்ள பூதம், மூலிகை, தெய்வம், யந்திரம், காலம், வடிவம் இவைகளை கையாளும்போதும் இதையே தொடர்ந்து கடைபிடிக்கும்போதும் பட்சி நம் மனதோடு ஒன்றி வெற்றிகரமாக வழி நடத்தியதை பலபேரிடம் ஆராய்ந்ததில் அறிந்தேன்.

சித்தர்கள் கொடுத்த கலை வீணாய் போகாது என்பதை மனப்பூர்வமாக ஒப்புக்கொண்டு இதை மேலும் ஆய்வு செய்தேன். அதில் பட்சிக்காக  சொல்லப்பட்ட மூலிகையில் தன்னுடையதை தேர்ந்தெடுத்து அதையே நம் அனைத்து செயலுக்கும் பயன்படுத்தினால் பலன் தருகிறது. அதேபோல் நம்மை நாடி வருவோர்க்கு அவரவரின் மூலிகையை எடுத்து கையாண்டு உருபோட்டு கொடுக்கும்போது அவரவருக்கு மிக அற்புதமாக பலன் கொடுத்ததை அறிய முடிந்தது .

இதில் ஒன்றை கவனிக்க வேண்டியது யாதெனில் இதை தொழிலாக செய்பவர் பஞ்சபட்சிகளின் அனைத்து மூலிகையையும் வசியம் செய்து, பஞ்சபூதங்களையும் வசியம் செய்து கொள்வது மிக அவசியமாகும் . அப்போதுதான் அவரவர் எதிரி பட்சி உங்களை தாக்காது. அதேபோல் அஷ்டகர்மத்தில் பல்வேறு வகையான மூலிகைகள் பயன்படுத்தப்பட்டாலும் என் அனுபவத்தில் பஞ்சபட்சி மூலிகையே போதுமானது. கூடுதலாக ஐவகை மூலிகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அருகம்புல் இதற்குரியவர் விநாயகர், வில்வம் இதற்குரியவர் சிவபெருமான், துளசி இதற்குரியவர் விஷ்ணுபகவான், வெற்றிலை இதற்குரியவர் ஆஞ்சநேய சுவாமி, வேப்பிலை இதற்குரியவர் அன்னை ஆதிபராசக்தி. இவையே ஐவகை மூலிகை, ஐவகை தெய்வமாகும். இவர்களால் முடியாத ஒரு செயல் என்று ஒன்றுமில்லை. எல்லா செயலுக்கும் வேண்டுதலுக்கும் இவர்களை பயன்படுத்தினாலே போதுமானது.

அடுத்தபடியான பிரணவம், ஓசை, ஒலி, நாதம், சப்தம், ரீங்காரம் எனும் சடாச்சர நாதன் ஐவகைக்கும் கலந்த அக்னியான எம்பெருமான் முருகவேல் இவரை வழிபட்டால்கூட போதும். ஐவகை மூலிகையையும் ஒன்றுசேர்த்து முருகபிரானை பூஜித்தாலே கூட அஷ்டகர்ம செயலும் செய்யலாம்.

இந்த தெய்வங்கள் தர்மத்திற்கும், நீதிக்கும் எதிராக அட்டகர்ம செயலை செய்ய இவர்கள் இசைவதில்லை. நம்மை தண்டித்து விடுவார்கள்.  எனவே மனிதன் தானே சக்தியை தவத்தால் ஏற்றி அஷ்டகர்ம செயலை தன் மனதிறனால் செய்து வந்தான். இதற்கு பஞ்சபட்சி சாஸ்த்திரமும் அவன் மூலிகையும் பெரிதும் உதவியது.

நன்மைக்கு அவரவர் மூலிகையும், எதிரியை அழிக்க ஒவ்வொருவருக்கும் இருக்கும் எதிரி மூலிகையை பயன்படுத்தினாலே போதும். நல்ல செயலுக்கு கூடுதலாக ஐவகை மூலிகையை பயன்படுத்தலாம். இவைகளே மூலிகையில் போதுமானதாகும். மீதத்தை வைத்தியத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவே சத்திய உண்மை.

வாழவைக்கவும், விழவைக்கவும் மூலிகை மிக நல்ல பயன்பாடுதான் அதை மறுக்க முடியாது. ஆனால் எதிரியை வீழ்த்தும் நோக்கில் உள்ள மூலிகைகள்தான் பிரபலமாக பேசப்படுகின்றன. வாழவைக்கும் மூலிகையான ஐவகை மூலிகையும், பஞ்சபட்சி மூலிகையும் ஏதோ ஒப்புக்கு சப்பான் என்பதுபோல பார்க்கிறார்கள். இது தவறு.

சித்தர்கள் மக்கள் பயன்பெறவே இந்த ஐவகை மூலிகைகளை அர்ச்சனை மலர்களாகவும் மாலைகளாகவும் வைத்தனர்.  இன்றுவரை கடைபிடித்தவண்ணமே உள்ளனர். இதை புரிந்து தேவையற்ற குழப்பங்களை நீக்கி மூலிகையை பயன்படுத்துங்கள்.

கரிசலாங்கன்னி, சுரைவேர், நத்தை சூரி, அழகன்னி, தொழ கன்னி இன்னும் பல மூலிகைகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. எல்லாமே மாந்திரீகத்திற்கு பயன்படுத்தலாம் என்றாலும் நீங்கள் குழப்பம் இல்லாமல் முதலில் எதாவது ஒரு தெய்வ மூலிகையை சித்திசெய்யுங்கள். மூலிகைகள் தொழில் செய்யும்போது பயன்படுத்தக்கூடியது. எனவே இவைகளை விரிவாக பயிற்சியில் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

நீங்கள் செயல்களை செய்ய முற்படும் முன் அருள்வாக்கு கூற முற்படுங்கள் அல்லது செய்யும் செயல் பலித்தமாக எதாவது ஒரு மந்திரத்தையாவது சித்திசெய்துகொள்ளுங்கள். இன்றைய காலகட்டத்தில் மூலிகைகளை தேடி எடுக்க மிக சிரமமாக உள்ளது. எல்லா மூலிகையும் கிடைக்கும்போது எடுத்து பாதுகாக்கவும் முடிவதில்லை. எனவே மூலிகைக்கு மாற்று மூலிகைகளாக மிக எளிமையாக கிடைக்கக்கூடிய அருகம்புல்லை வசியம் செய்து பயன்படுத்துவது சாலச்சிறந்தது அல்லது மூலிகைக்கு பதிலாக யந்திரங்களை பயன்படுத்தலாம் அல்லது மூலிகை யந்திரங்களுக்கு பதிலாக மந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது இவை மூன்றிற்கும் பதிலாக தெய்வத்தை வசியம் செய்து பயன்படுத்தலாம் அல்லது இந்த நான்கையும் நீக்கி தன் மனதை ஆழ்மனதாலும், சக்ரா சக்தியை வாசியால் எழுப்பியும் தன்னையே வலிமையாக்கி மனஆற்றலால் பயன்படுத்தவும். இவை எல்லாவற்றையும் சேர்த்து பயன்படுத்த முடிந்தாலும் மிக மிக நன்றே எளிதில் காரிய ஜெயம் உண்டாகும்.

                          நன்றி  நலம் நிறைக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *