மந்திர ஓலையின் பயன் அறிக :-

மந்திர ஓலையின் பயன் அறிக :-

அக்காலத்திலேயே புகழ்பெற்றது இந்த மந்திர ஓலை முறையாகும். பலரும் நினைப்பதுண்டு. பேப்பர் இல்லா காலம் என்பதால் தன் படைப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் ஓலையில் எழுதிவைத்து சென்றார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் இதில் உண்மை இருந்தாலும் மந்திர தந்திர வித்தைகளை மட்டும் பல சூட்சும கலப்புடன் அவர்களுக்கு மட்டுமே புரியும்படி எழுதி அவர்கள் தினசரி கையாண்டார்கள், கையாண்டது தன் குலத்திற்கும், உண்மை சீடனுக்கு மட்டும் உபதேசித்துஅவரவர்களை வேறொரு பிரதி எடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

இது ஏன் என்று ஆராயும்போது எதை ஒன்றை தொடர்ந்து பார்வை செய்கிறோமோ அது நம்மோடு ஐக்கியமாகும். எதை தொடர்ந்து பயில்கிறோமோ அதுவும் நம்மோடு ஐக்கியமாகும். இந்த தத்துவத்தை அன்றே உணர்ந்ததால் மந்திரம் உயிர்ப்புடன் தன்னோடு சேர ஓலைச்சுவடியில் மந்திரங்களை எழுதி அதை ஒன்றையே பயன்படுத்தினர். ஒன்றையே பயன்படுத்தும்போது அது நமக்கு வசியமாகிவிடும். தாயகட்டை கூட உருட்டி விளையாடுவோம் அல்லவா. அதை நம் கை பட உருட்டி உருட்டி போடுவோம் இந்த எண் விழுந்தால் நன்றாக இருக்கும், அந்த தாயம் விழுந்தால் நன்றாக இருக்கும் என நமக்கு தேவையென்னவோ அதை கேட்போம். இதை ஆடியவருக்கு இந்த அனுபவம் தெரியும். சிலருக்கு ஆடும்போது தாயக்கட்டை உருட்டி போடும்போது தேவையான எண்களை கேட்டபடியே உருட்டி போடுவர். அவர்கள் கேட்ட எண்ணே தொடர்ந்து விழும். இது எவ்வாறு என்றால் அந்த தாயக்கட்டையை தொடர்ந்து பயன்படுத்தியதால் வசியமாகி இருக்கும் இதுதான் விஷயம்.

நாம் பயன்படுத்தும் வண்டிகள், பேனா, பொருட்கள் யாவுமே இப்படித்தான். தெய்வம்கூட ஒன்றையே பயன்படுத்தும்போது நமக்கு வசியமாகிவிடுகிறது . இதே தத்துவத்தின் வெளிப்பாடாக அன்றே கையாண்ட ரகசியம் தான் ஓலைச்சுவடி முறையாகும்.

ஒரே மந்திரமானாலும், பல தெய்வங்களின் மந்திரமானாலும், தாலி ஓலையிலோ அல்லது செப்பு தகட்டிலோ எழுதிவைத்து அதை எடுத்துக்கொண்டு போய் சுத்தி செய்து ஒரு வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்தி சுவாமியின் முன் வைத்து வணங்கி வாசிக்க வேண்டும். அதன்பின் கொண்டுவந்து தங்களின் தேவதை முன் உபாசிக்க வேண்டும். இவ்வாறு தேவதையின் முன் மந்திர உரு ஏற்றும்போது ஒரு தடவையாவது இந்த மந்திர சுவடியை இரு கைகளால் பிடித்து வாசித்துவிட்டு பிறகுதான் கண்களை மூடி ஜெபமாலை உதவியோடு எண்ணிக்கையை மேற்கொண்டு மன உரு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் இந்த ஓலையில் உள்ள மந்திர எழுத்துக்கள் பிரணவத்துடன் (உயிர்) எப்பொழுதும் இருக்கும். இந்த ஓலை கட்டை பரம்பரை பரம்பரையாக பயன்படுத்தலாம். உயிராக பலிக்கும்.

ஒருவர் ஒரு பிரச்சனைக்கு வருகிறார் என்றால் ஆத்மார்த்தமாக வேண்டி தாயே அய்யனே வந்தவர் பிரச்சனையை தீர்க்க யார் எனக்கு உதவுவீர்கள் என்று கேட்டு ஓலை கட்டை பிரித்து கையில் பட்ட ஓலையை எடுத்து வாசிக்கும்போது அதில் எந்த தெய்வத்தின் மந்திரம் வருகிறதோ அந்த தேவதையை நம்பி உருபோட்டு அவர் செயலை முடிக்கலாம். அல்லது ஓலையின் ஒவ்வொன்றிலும் எண் பதித்து அதை ஒரு அட்டையில் எண் மட்டும் எழுதி வந்தவரிடம் ஆருடத்திற்கு தொடுவதுபோல் எதாவது ஒரு எண்ணை மனம் பட்டதில் கை வைக்கச் சொல்லி அந்த எண் என்னவோ அந்த எண்கொண்ட ஓலைச்சுவடியில் உள்ள தேவதை வந்தவருக்கு உதவி செய்ய ஏற்புடையவர் என கருதி அந்த தெய்வத்தை நம்பி உரு 108 ஏற்றி வந்தவர் செயலை சத்தியம் செய்து செயலை முடித்துகொடுக்கலாம்.

ஒன்றை மறக்காதீர்கள் நீங்கள் சுவடியில் உள்ள மந்திரங்களை ஏற்கனவே பார்த்து 1008 தடவை உரு ஏற்றி வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரத்திற்கும் இறுதியில் சிறு யாகம் நடத்தவும். அப்போதுதான் மந்திரம் உயிர் பெறும். பிறகு நீங்கள் மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.

அருள்வாக்கு கூறும் சக்தி கிடைக்க வேண்டும் என்ற பிராத்தனை நடக்கவில்லை என்றாலும் மந்திர ஓலை உதவியுடன் மற்றவர் செயலை செய்யலாம். மற்றவர் செயலை செய்ய விருப்பமில்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுக்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்பெற விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் பரம்பரை பாதுகாப்பிற்காக மந்திர ஓலை  தயார்செய்து உரு ஏற்றி தொடர்ந்து அதையே கடைபிடியுங்கள். மந்திரம் கூற கூற மனமும் உடலும் மந்திரமாக மாறும் அதேபோல் மந்திர ஓலையும் பலம் பெற்று கையாள்பவருக்கு மந்திரம் அதன் தேவதை உடனே சித்தியாகும். இதுவே பரம்பரை பரம்பரையாக கைமாறும்போது அதித பலம் பெற்றுவிடும்.

12 வருடம் வைத்து பூஜிக்கும் மந்திர ஓலையாகப்பட்டது குலதெய்வமாக பாவிக்கலாம். ஏனெனில் குலதெய்வ ஆற்றல் அதில் உரு ஏறிவிடும். மந்திரம் நம்மோடு பேசும். பலர் குடும்பத்தில் தெய்வ புராணங்களை வைத்து பல வருடமாக பூஜிப்பார்கள். அதை குல பொக்கிஷமாக காப்பார்கள். எதாவது ஒரு பிரச்சனை என்றால் அதில்தான் சத்தியம் செய்யச் சொல்வார்கள். அதை தொட்டு வணங்கி சென்றால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. அது உண்மையும் கூட. இவை மனஆற்றலால் அந்த புத்தகங்களுக்கு சக்தி கிடைக்கும். மந்திரம் எழுதி உரு மற்றும் யாகம் தர்ப்பணம் கொடுத்து உயிர் கொடுக்கப்பட்ட மந்திர ஓலையாகப்பட்டது நமக்கு ஒரு சில மண்டல பூஜையிலேயே பலன் கொடுக்க ஆரம்பித்துவிடும்.

இந்த மந்திர ஓலை செய்முறை அறிக.

8 அங்குல நீளம் ஒன்றரை முதல் இரண்டு அங்குலம் வரை அகலம் கொண்ட தாலிஓலை அல்லது செப்பு தகடு வெட்டி இதே அளவில் ஓலையின் பாதுகாப்பிற்கு மரப்பட்டை இரண்டும் தயார்செய்து கட்டில் இருந்து ஓலைகள் சிதறாமல் இருக்க சிறு நூல்கயிறு நுழையும் அளவிற்கு இருபக்கமும் துவாரம் செய்து தயார்படுத்திக்கொள்ளுங்கள். பிறகு முறையாக கணபதி பூஜை செய்து குருபூஜை செய்து உடற்கட்டு போட்டு பின்பு மந்திரம் எழுத வேண்டும். மூலமந்திரம் மட்டும் எழுதவும். முதலில் விநாயகர் மந்திரமே எழுதவும்.

சைவ, வைணவ, காணபத்யம், சௌரம், சாக்தம், கௌமாரம் இந்த பிரிவின் மிக சக்தி வாய்ந்த அஷ்டகர்ம மந்திரங்களை எழுதி உருவாக்க வேண்டும். பிறகு முகூர்த்தமான ஒருநாளை பட்சி சாஸ்த்திர உதவியுடன் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக உரு செய்ய வேண்டும். மந்திர உருவிற்கு முன் சில மூலிகைகளை கொண்டு மை அரைத்து மந்திர எழுத்துகளில் பூசி மந்திர ஓலையை சுத்தி செய்து பிறகு பயன்படுத்தவும். உங்களால் தயார் செய்ய இயலவில்லை எனில் வேறொரு குரு மூலமாக தயார்செய்து பூஜித்து பெற்று நீங்கள் மந்திர உரு செய்ய பயன்படுத்தலாம் தவறில்லை.

இன்றைக்கு தாலி ஓலை சரிவர கிடைப்பதில்லை . கிடைத்தாலும் சில வருடங்களில் மக்க ஆரம்பித்துவிடுகிறது . ஆதலால் மயில் எண்ணெய் சாம்பிராணி தைலம் இரண்டும் கலந்து பூசி பாதுகாப்பார்கள். இம்முறை சரியானது என்றாலும் எல்லோருக்கும் இது சாத்தியமில்லை. எனவே செப்பு தகட்டில் எழுதி பயன்கொள்ளுமாறு தெரிவிக்கிறேன்.

மற்றபடி ரகசியம் எதுவும் இன்றி தெரிவித்துவிட்டேன். நீங்களேகூட தயார்செய்துகொள்ளலாம். ஓலை தகட்டில் எழுதி உரு ஏற்றும் மந்திரம் எந்த அட்சரமும் சக்தி பெற்று பலன் கொடுக்காமல் போகாது . எவ்வளவு பெரிய ஆலயம் உருவாக்கினாலும் மூலவர் அடியில் பிரதிஷ்டை செய்ய செப்பு தகட்டில் எழுதப்பட்ட சிறு யந்திரம்தான் வலிமை சேர்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். அதைப்போலத்தான் மந்திர ஓலை சுவடியும்.


                                                                      நன்றி

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *